நடிகர் தனுஷ், மம்மூட்டி குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் தனுஷுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ப்ரோமோஷன் பணிகளும் ப்ரீ ரிலீஸ் விழாவும் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் பேசிய தனுஷ், மம்மூட்டியுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட சுவாரசியமான விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன்படி மேடையில் பேசிய தனுஷ், “பழம்பெரும் நடிகர் நாகேஷ் சார் ஒருமுறை என்னிடம், ‘நடிப்பது போலவே தெரியாமல் நடிப்பவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறினார். 24 வருடங்களுக்குப் பிறகு, மம்மூட்டி சாருடன் இணைந்து நடிக்கும்போதுதான் அந்த அறிவுரை எனக்குப் பெரிதும் கைகொடுத்தது,” என்று குறிப்பிட்டார்.
மேலும் கலகலப்பாகப் பேசிய அவர், “அவருடன் நடிக்கும்போது நான் மட்டும் கவனமாக இல்லாமல் இருந்திருந்தால், என்னை மொத்தமாக முடித்துவிட்டுப் போயிருப்பார்! அவரிடம் அப்படி ஒரு ஆளுமையும் ஈர்ப்பும் இருக்கிறது,” என்று மம்மூட்டியின் நடிப்பை வியந்து பாராட்டினார்.
அத்துடன் தனது மகனின் பெயருக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தையும் மேடையில் பகிர்ந்துகொண்ட தனுஷ், “பாலு மகேந்திரா சார் இயக்கத்தில் நீங்கள் நடித்த ‘யாத்ரா’ திரைப்படத்திலிருந்துதான் என் மகனுக்கு ‘யாத்ரா’ என்று பெயர் வைத்தேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனுஷின் இந்தப் பேச்சு அரங்கத்தில் இருந்த ரசிகர்களிடையே பலத்த கரகோஷத்தை எழுப்பியது.
