நடிகை சாய் பல்லவி, ஓம் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசி உள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் தனது நடிப்பினாலும், நடனத்தினாலும் ஏராளமான ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.
அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் ஓம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் இப்படத்திலும் இவருடைய கதாபாத்திரம் வலுவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகும் இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய சாய் பல்லவி, ஓம் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்துச் சுவாரசியமான தகவல்களைச் சாய் பகிர்ந்துள்ளார்.
“I never imagined myself playing a cop role.. I used to fight with my sister saying ‘Ongi adicha Ondra Ton Weight da..’ dialogue..😃 But it actually happened for real now..”
– #SaiPallavi https://t.co/kWNpdgZ8IE
— Laxmi Kanth (@iammoviebuff007) November 15, 2026
அதன்படி அவர், “நான் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. சின்ன வயதில் என் சகோதரியுடன் சண்டை போடும்போது, சூர்யா சாரின் பிரபலமான ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என்ற வசனத்தைச் சொல்லி விளையாடுவேன். ஆனால், இப்போது அது நிஜமாகவே நடந்துவிட்டது; திரையில் நானும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துவிட்டேன்,” என்று மிகவும் மகிழ்ச்சியுடனும் நகைச்சுவையாகவும் பகிர்ந்துகொண்டார். சாய் பல்லவியின் இந்தக் கலகலப்பான பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதுவரை மென்மையான மற்றும் உணர்வுபூர்வமான கதைகளில் நடிக்க வந்த சாய் பல்லவி ஓம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
