தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான திரைக்கதைக்கும், அதிரடியான ஆக்ஷன் டிராமாக்களுக்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் ஹரி. சூர்யா நடிப்பில் வெளியான ‘வேல்’, ‘சிங்கம்’ வரிசைப் படங்கள் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான ‘பூஜை’ போன்ற பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படங்களைக் கொடுத்துத் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தவர்.
இவர் கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷால் நடிப்பில் ‘ரத்னம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.
இதனால், இயக்குநர் ஹரி அடுத்ததாக யாருடன் இணைவார்?, எந்த மாதிரியான கதைக்களத்தைத் தேர்ந்தெடுப்பார்? எப்படி கம்பேக் கொடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவி வந்தது. இந்நிலையில் ஹரியின் புதிய படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி அவர், நடிகர் அதர்வா உடன் இணையவுள்ளதாகச் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது நடிகர் அதர்வா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸின் படப்பிடிப்பில் மும்முரமாக நடித்து வருகிறார்.
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததும், அதர்வா மற்றும் இயக்குநர் ஹரி இணையும் இப்புதிய திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் எனவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இயக்குனர் ஹரி, தனது வழக்கமான அதனுடைய ஆக்சன் பாணியிலிருந்து விலகி ஃபேமிலி என்டர்டெய்னர் படத்தை கையில் எடுக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
