தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பட டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட்டிலும் கால் பதித்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். அந்த வகையில் இவர் பாலிவுட்டில் ஏற்கனவே ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ராஞ்சனா, அத்ரங்கி ரே ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தது இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு தேரே இஷ்க் மெய்ன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தை கலர் எல்லோ ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படமானது 2025 நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் டீசர் வெளியாகும் எனவும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இதன் முதல் பாடல் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.