இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தமிழ் சினிமாவில் தீனா, ரமணா, துப்பாக்கி, கத்தி போன்ற வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். கடைசியாக இவர் பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் மதராஸி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன், சபீர் கல்லாரக்கல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. நாளை (ஆகஸ்ட் 24) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதே சமயம் ட்ரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். மேலும் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் வெளியாக இருப்பதால் இப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர், “விஜய் சார் மற்றும் அஜித் சார் ஆகிய இருவரும் புதுமுக இயக்குனர்களுடன் பணியாற்றினர். இதுவே இவர்களின் நம்ப முடியாத வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களைப் போல் சிவகார்த்திகேயனும் பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். இளம் இயக்குனர்களின் திறமைகளை நம்பி அவர்களுக்கு வாய்ப்பளிப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.


