இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர், நடிகர் மாதவனை பாராட்டியுள்ளார்.
நடிகர் மாதவன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சைத்தான் எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து டெஸ்ட் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் மாதவன். அதேசமயம் இவர் அதிர்ஷ்டசாலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தினை நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்குகிறார். AA வீடியோ கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஐங்கரன் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து மடோனா செபாஸ்டியன், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் சமீபத்தில் நடந்த பேட்டியில், “என்னுடைய யாரடி நீ மோகினி படத்திலிருந்து திருச்சிற்றம்பலம் வரை அனைத்து படங்களையும் நல்ல ஒரு பீல் குட் படங்களாகவும் காதல் கலந்த குடும்ப படமாகவும் தான் கொடுத்து வருகிறேன்.
அதே சமயம் என்னுடைய படங்களில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருந்திருக்கும். இப்போது மாதவன் சாரை வைத்து இயக்கியுள்ள அதிர்ஷ்டசாலி படம் என்னுடைய வழக்கமான பாணியில் எடுக்கப்பட்ட படம் இல்லை. அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு ஃபேண்டஸி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் மாதவன் சார்தான். முதன்முறையாக அவருடன் வேலை செய்திருப்பதால் எனக்கும் இந்த அதிர்ஷ்டசாலி படம் மிகவும் ஸ்பெஷலான படம் தான். மேலும் நடிகர் மாதவன் ஒரு குட்டி கமல்ஹாசன் ” என்று தெரிவித்துள்ளார்.