நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது பல படங்களில் நடிகராகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று பல விருதுகளையும் அள்ளியது. அதைத்தொடர்ந்து மேலும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் யோகி பாபு. போட், வான மேகி, பூமர் அங்கிள் போன்ற திரைப்படங்கள் யோகி பாபு நடிப்பில் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் யோகி பாபு ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்திருந்தது. சுரேஷ் சங்கையா இயக்கியிருந்த இந்த இரண்டு படங்களுமே கிராமத்து பின்னணியில் நல்ல கதையம்சம் கொண்ட படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே அடுத்ததாக சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சுரேஷ் சங்கையா, யோகி பாபு கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு கிணத்த காணோம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சந்தானத்தின் பெரும்பாலான படங்களின் தலைப்பானது நடிகர் கவுண்டமணியின் டயலாக் ஆக தான் இருக்கும். இதனை அவரே ஒரு முறை மேடையில் கூறியிருக்கிறார். அதன்படி இப்போது யோகி பாபுவின் புதிய படத்திற்கு நடிகர் வடிவேலுவின் கிணத்த காணோம் என்ற ஃபேமஸான காமெடி டயலாக் தான் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யோகி பாபு, சந்தானத்தின் ஸ்டைலை பின்பற்றி வருகிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


