டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் டியூட் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜாலியான என்டர்டெயினர் படமாக வெளியான இந்த படத்தை சிலரும் விமர்சித்து வந்தனர். இருப்பினும் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களுக்கு பிறகு வெளியான இந்த படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. சாய் அபியங்கரின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வழக்கம்போல் ஃபுல் எனர்ஜியுடன் நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனை பலரும் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


