துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடைசியாக ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அடுத்தது இவரது நடிப்பில் காந்தா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். செல்வமணி செல்வராஜ் இந்த படத்தை இயக்க ஜானு சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தை துல்கர் சல்மானும், ராணா டகுபதியும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இந்த படமானது தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படமானது 2025 செப்டம்பர் 12ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் ரிலீஸ் 2025 தீபாவளிக்கு தள்ளிப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏனென்றால் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தை விமர்சையாக கொண்டாடியது போல், ‘காந்தா’ படத்தையும் தீபாவளியையும் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். எனவே விரைவில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.