துல்கர் சல்மானின் காந்தா பட வசூல் குறித்த புதிய விவரம் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் தான் காந்தா. இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி இருந்தார். வேஃப்பரர் ஃபிலிம்ஸ் நிறுவனமும், ஸ்பிரிட் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்திருந்தார். இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படமானது இயக்குனருக்கும், நடிகருக்கும் இடையிலான ஈகோவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. அதாவது ஆரம்பத்தில் இந்த படமானது எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்தப் படத்திற்கும் தியாகராஜ பாகவதரின் கதைக்கும் எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை என்பது படம் வெளியான பின்னர் தெரிய வந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் துல்கர் சல்மான் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகிறார். மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இப்படம் வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.24.50 கோடியை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


