தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தென் தமிழக மாவட்டங்களுக்கு நடிகர் ரஜினி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய தெற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. மேலும், வீடுகள் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். நெல்லை நகர்ப்பகுதியில் மழை வெள்ளத்தால் கான்கிரீட் வீடு சில நொடிகளில் இடிந்து தரமட்டமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் களத்தில் இறங்கி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை வெள்ள பாதிப்புக்கு சினிமா பிரபலங்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் அதிகம் எழுந்தன. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவ்டடங்களில் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் சார்பில் இன்று முதல் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை வெள்ள பாதிப்பின்போது, தனது பிறந்தநாள் அன்று இதேபோல, நிவாரணப் பொருட்கள் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.