தமிழ் சினிமாவின் முக்கியமான பிரபலங்களாக வலம் வரும் தனுஷும், ஜி.வி. பிரகாஷும் தனிப்பட்ட வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள். இருவரின் காம்போவில் வெளியான பாடல்கள் பெரும்பாலும் ஹிட் பாடல்களாக அமைந்திருக்கின்றன. இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ், தனுஷுடன் இணைந்து நடிக்க மறுத்ததாக கூறியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ராயன் திரைப்படம் வெளியானது. இந்த படம் தனுஷின் 50வது படமாகும். இதனை தனுஷ் தானே இயக்கி, நடித்திருந்தார். இதில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருந்தார். வன்முறை காட்சிகள் நிறைந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய ஜி.வி. பிரகாஷ், ‘ராயன்’ படத்தில் நடிக்க மறுத்ததாக கூறியுள்ளார். அதன்படி அவர், “நான் ‘ராயன்’ படத்தில் தனுஷின் தம்பியாக நடிக்க வேண்டியது. ஆனால் அது முதுகில் குத்தும் கேரக்டர் என்பதால் அதில் நடிக்க மறுத்துவிட்டேன். நம்ம நண்பனுக்கு அப்படி செய்ய கூடாதுன்னு அதில் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக நான் வில்லனாக கூட நடித்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
