நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே விஜய் நடிப்பில் பிகில் படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. விறுவிறுப்பான ஆக்ஷன் களத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்து மைக் மோகன், நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஒரு புத்திசாலித்தனமான அரசியல் ஆக்சன் படமாக இப்படத்தை எழுதியுள்ளாராம் வெங்கட் பிரபு. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே விஜய் நடிப்பில் 2001 இல் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து 2003இல் வெளியான “புதிய கீதை” படத்திலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து தளபதி விஜய்க்காக இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்திற்காக யுவன் ஷங்கர் ராஜா, குத்தாட்டம் போடும்படியான ஒரு தர லோக்கலான குத்து பாட்டை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டு விட்டதாகவும் பாடல் மிக அருமையாக உருவாகியுள்ளது எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் இப்படத்தின் வேறு ஒரு பாடலை எழுதுவதற்கான பொறுப்பை இயக்குனர் வெங்கட் பிரபு தன் தந்தையான கங்கை அமரனிடம் ஒப்படைத்துள்ளார். கங்கை அமரன் பாடலாசிரியர் மட்டுமின்றி, இயக்குனர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களில் பயணித்து வருபவர். வெங்கட் பிரபுவின் பல படங்களில் இவர் பாடல்கள் எழுதியுள்ளார். கங்கை அமரனுக்கு வயதாகி இருந்தாலும் இவருடைய பாடல் வரிகள் இக்கால இளைஞர்களை கவரும் விதமாக துள்ளலாக இருக்கும். அந்த வகையில் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்காக எழுதியுள்ள இப்பாடல் எத்தகைய பாடல் என்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும். 2024 ஆம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக தளபதி 68 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் சென்னை, தாய்லாந்து படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்தடுத்து தளபதி 68 படத்தின் தலைப்பு ,பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர், பாடல்கள் என தொடர்ந்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -