இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் முகமூடி அணிந்தவர்களால் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், மாதவன் நடிப்பில் வெளியான ‘மின்னலே’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனித்துவமான இசையை வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு குறைவான படங்களில் பணியாற்றி வந்த ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது மீண்டும் பிசியான இசையமைப்பாளராக மாறியுள்ளார். கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பிரதர்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னையில் முகமூடி அடைந்தவர்களால் கடத்தப்பட்டு இருப்பதாகவும், பணத்திற்காக இந்த கடத்தல் நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
#HarrisJayaraj kidnapped 👀😳
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) October 25, 2025

அதே சமயம் ஹாரிஸ் ஜெயராஜ் கடத்தப்பட்ட விவகாரத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் கை, கால்கள் கட்டப்பட்டபடி, முகமூடியால் முகம் மறைத்தபடி, ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் அங்கு வந்து அவருடைய முகமூடியை நீக்குகின்றனர். இவ்வாறான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த வீடியோ ஏதாவது ஒரு புதிய படத்திற்கான ப்ரோமோஷனாக இருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Just got back from shoot and heard the news about Harris sir! What the hell is going on?? 😳
— Arya (@arya_offl) October 24, 2025
இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் ஆர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இப்பொழுது தான் படப்பிடிப்பு முடிந்து வந்தேன். ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய செய்தியை கேள்விப்பட்டேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது” என்று பதறிப்போய் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் இது ஆர்யா படத்திற்கான ப்ரோமோஷனாக இருக்குமா? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.


