Homeசெய்திகள்சினிமா2022 ஆம் ஆண்டின் ஹிட் படங்கள்...

2022 ஆம் ஆண்டின் ஹிட் படங்கள்…

-

2020 ஆம் ஆண்டு கொரோன என்ற ஒரு பெரும் தொற்று உலகை உலுக்கியது. அப்போது அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து மக்களை வீட்டிற்குளேயே முடக்கியது. அந்த கால கட்டத்தில் தான் மக்கள் படம் பார்த்து பொழுது போக்க ஒடிடி தலம் என்று ஒன்று இருப்பதை மக்கள் அறிந்தனர். அதன் வழியாக மக்கள் வீட்டில் இருந்தே படம் பார்க்க பழகி கொண்டனர்.

கொரோன என்ற பேராபத்து முடிவிற்கு வந்தது கட்டுப்பாடுகள் தளர்ந்தது. 2021 இறுதியில் சினிமா ரசிகர்கள் ஒடிடி தளங்களில் படம் பார்ப்பதை கை விடவில்லை. வீட்டில் குழந்தைகளோடு விளையாடி கொண்டு விரும்பிய நேரத்தில், விரும்பிய படத்தை பார்க்கும் வசதியை ஓடிடி தலங்கள் தந்ததால் இந்த வருடமும் ஏராளமான படங்களும், தொடர்களும் ஓடிடியில் வெளியாகின.

2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரும் எண்ணிக்கையிலான திரைப்படங்கள் ஒடிடி தலங்களில் தான் வெளியானது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் வெளிவந்த நடிகர் அஜித்தின் “வலிமை” திரைப்படம் திரையரங்குகளுக்கு மீண்டும் புத்துயிர் தந்தது.

அந்த படம் குறித்து சில விமர்சனங்கள் வெளியான போதும் அந்த படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தார்கள். இதனால், வலிமை படத்தின் வருவாய், 200 கோடி ரூபாயை தொட்டு அஜித் ஒரு மாஸ் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்தது.

அடுத்து, விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் இசையமைப்பாளர் அனிருத் இசையில் “ஹலமித்தி ஹபிபோ” என்ற அரபிக் குத்து பாடலுக்கு ஊர் உலகமெல்லாம் ஆட்டம் போட்டது.

2022 ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த படமாக இயக்குநர் மணிரத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 1 அமைந்த்து. பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவுகளை நிறைவேற்றியது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் மக்களை குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வரவழைத்தது.
சோழ பேரரசை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்க பட்ட இந்த படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், அவரது அண்ணன் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அவரின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தியும் நடிப்பில் அசத்தி இருந்தனர்.

இவர்கள் மட்டும் இன்றி பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, பார்த்திபன் என நட்சத்திர பட்டாளமே திரையில் ஜொலித்தது.
வசூலை வாரிகுவித்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இறுதி காட்சியில் தந்த பரபரப்பை கொண்டு இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் திரை உலகிற்கு புத்துணர்ச்சி அளித்த மற்றொரு திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி என மாஸ் ஹீரோக்கள் கூட்டணியில் வெளிவந்த இப்படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக இந்திய அளவில் அதிக டிக்கெட் புக்கான படங்களின் பட்டியலில் விக்ரம் படத்திற்கு 6 வது இடம் கிடைத்திருக்கிறது.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான திரைப்படம் கார்கி. சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

இயக்குனர் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்து வெளியான திரைப்படம் இரவின் நிழல். Non-linear வகையில் வெளியான முதல் சிங்கிள் ஷாட் மூவி என்ற பெருமையுடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கினார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த இந்த திரைப்படம் Love Is Political என்ற வசனத்துடன் காதலை பற்றிய அரசியல் படமாக வெளிவந்தது. காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. மாறாக காதல் பாலின பேதங்கள், சாதி மதங்கள், நிறவேறுபாடுகள் இல்லாதது. குறிப்பாக தன்பால் ஏற்படும் காதலும் திருநங்கையின் காதலன் கூட உண்டு என தயக்கமில்லாமல் இந்த படத்தில் பேசப்பட்டது. கதாநாயகனாக கலையரசன், நாயகியாக துஷ்ரா நடித்திருந்த படம் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த புதிய முன்னெடுப்பாக கவனத்தை பெற்றது.

கௌதம் வாசுதேவ், சிம்பு கூட்டணியில் செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வந்த வெந்து தணிந்தது காடு மெகா வெற்றி பெற்றது. கருவேல முட்களில் காயங்களுடன் காலம் தள்ளும் நடிகர் சிம்பு மும்பையில் பரோட்டா கடை வேலைக்கு செல்கிறார்.
பகலில் கடையில் வேலை, இரவில் வெட்டு குத்து என புதிய உலகத்தில் பயணித்திருப்பார் சிம்பு. அங்கு துணிக்கடையில் வேலை பார்க்கும் பாவையுடன் காதல். மோதலும் காதலும் நிறைந்தது தான் இந்த படம்.

“காய்ந்த முள்ளு காட்டுக்குள் வியர்வை வடிந்த மெலிந்த தேகம், ஒட்டிய கண்ணத்துடன் ஒரு கை சாய்த்து நடக்கும் மேனரசித்துடன் என்டறி ஆகும் சிம்புவை பார்க்கும் போது அடடா சிம்புவா இது என சிலிர்க்க வைத்தது.” மும்பை தமிழ் பெண்ணாக வரும் சித்தி இத்னானி புதுமுகம் என தெரியாத அளவுக்கு நடித்து இருந்தார் . இப்படத்தில் இடம்பெற்ற மல்லிகை பூ வச்சு வச்சு வாடுது என்ற பாடல் நல்ல ஹிட்டானது.

அடுத்தாக நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஜூலை மாதம் வெளியானது.
ஒரு எளிய கதையை சுவாரசியமான திரைகதையால் வலிமையாக மாற்ற முடியும் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஜவஹர். தனுஷ் மற்றும் நித்தியா மேனனின் யதார்த்தமான நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்தது.

இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ராக்கெட்ரி.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக கைது செய்யப்பட்டு சட்ட போராட்டத்தின் மூலம் குற்றமற்றவர் என விடுதலையான கேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. நடிகர் மாதவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெற்றி பெற்றது.

இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் தண்ணீர் மாஃபியா பற்றிய கதைக்களங்களுடன் வெளியானது.

ஜாலியான இன்ஸ்பெக்டர், சீரியஸான உளவாளி என மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார் கார்த்தி. தற்கால, அரசியலை பிரதிபலிக்கும் வகையில் “ஒரே நாடு ஒரே குழாய்” என்ற இந்தத் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துக்களை பேசிய சர்தார் திரைப்படம் மாறுபட்ட விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் முத்திரை பதித்தது.

கோமாளி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்த திரைப்படம் லவ் டூடே. இன்றைய காதலையும் காதலர்களைப் பற்றியும் பேசியது.

நாச்சியார் படத்தில் நடித்த இவானா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். காதலியின் தந்தையாக நடித்த சத்யராஜ் நிபந்தனைப்படி காதலியின் செல்போனை காதலனும் காதலனின் செல்போனை காதலியும் ஒருநாள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை கலகலப்பாக காட்சி படுத்தி இன்றைய எதார்த்தத்தை திரையில் காட்டியது லவ் டூடே.

5 கோடி ரூபாய் பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்க வைத்தது.
இப்படத்தில் இடம்பெற்ற மாமா குட்டி என்ற வசனம் 2K Kidsகளின் விருப்பமான வார்த்தையாகிவிட்டது.

செல்ல அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்னு விஷால் நடித்து டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி. ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். ஆக் ஷன் காமெடி என குடும்ப படமாக வெளியான கட்டா குஸ்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

ஒட்டுமொத்தத்தில் எதிர்கால தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படங்கள் படம் பிடித்து காட்டியுள்ளன.
நல்ல கதை, திரைக்கதை, கலை அம்சம் இருந்தால் கொரோனா பாதிப்பு மட்டுமல்ல எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் சினிமா தலை நிமிர்ந்து நிற்கும் என்பதை 2022 ஆம் ஆண்டு உணர்த்தி உள்ளது.

அதே போல் 2023 ஆம் ஆண்டும் தமிழ் சினிமாவின் வெற்றிகள் தொடருமா!…….

MUST READ