ஹவுஸ் மேட்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருந்த ‘ஹவுஸ் மேட்ஸ்’ எனும் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் தர்ஷன், காளி வெங்கட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து வினோதினி, தீனா, அர்ஷா சாந்தினி பைஜு ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வாடகை வீட்டில் வசிக்கும்போது எதிர்பாராத அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது. அப்போது இரு வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே தொடர்பு உண்டாவதை சுவாரஸ்யமான திரைக்கதையில் கொடுத்திருந்தனர். அதன்படி காமெடி கலந்த ஹாரர் படமான இந்த படத்தை ராஜவேல் எழுதி, இயக்கியிருந்தார். ப்ளே ஸ்மித் ஸ்டூடியோஸ், சௌத் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. சதீஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டது. இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


