சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் ரஜினி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்திலும் உருவாக்கி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் அதாவது மே 1ம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினியிடம் கூலி படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி, “கூலி படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்திருக்கிறது. அடுத்தது ஜனவரி 13 முதல் ஜனவரி 25 வரை படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது” என்று பதிலளித்தார்.
#Superstar about #Coolie & political questions!#Rajinikanth #Thalaivar #Jailer
— Rajini✰Followers (@RajiniFollowers) January 7, 2025
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டதும் “அரசியல் குறித்த கேள்விகள் கேட்க வேண்டாம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்” என்று செய்தியாளர்களிடம் கடிந்து கொண்டார் ரஜினி. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட இதுபோன்ற அரசியல் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் நடிகர் ரஜினி, செய்தியாளர்களிடம் அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.