கமல்ஹாசன், கடந்த 1996 இல் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும் மூன்றாம் பாகமும் உருவாகியுள்ளது. அதன்படி இந்தியன் 2 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகமானது வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக ப்ரமோஷன் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்தியன் 2 படம் தான் படமாக்கப்படும் போது அதிகமான காட்சிகள் இருந்தால் இயக்குனர் சங்கர் அதனை மற்றொரு பாகமாக உருவாக்கி இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன், “பிளாஷ்பேக் போர்ஷனில் நான் சேனாபதியின் தந்தையாக நடித்திருக்கிறேன். எனவே இதற்காகவே நீங்கள் இந்தியன் 3 படத்தை காண வர வேண்டும்” என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 3 படம் தான் தனக்கு பிடிக்கும் என்றும் சொல்லியிருந்தார் கமல். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் கமலுக்கு இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 3 மட்டும்தான் பிடிக்கும் என்று தவறாக புரிந்து கொண்டனர். தற்போது இதற்கு கமல்ஹாசன் தன்னுடைய விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதாவது, “இயக்குனர் சங்கருடன் ஆறு வருடங்களாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் ஒரு பிரஸ் மீட்டில், என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே என்று கேட்க வைத்தார்கள். இந்தியன் 3ஆம் பாகம் எனக்கு பிடித்ததனால் இந்தியன் இரண்டாம் பாகம் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. இந்தியன் 2 நன்றாக வந்திருக்கிறது. ஆனால் எனக்கு இந்தியன் 3 படத்தின் மீது தான் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை உங்களால் தடுக்க முடியாது. நான் அவர்களிடம் மூன்றாம் பாகத்தை எடுக்க சொல்லவில்லை. முதலில் இது ஒரே பாகமாக தான் இருந்தது. அதனால் என் மேல் கோபப்படாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
- Advertisement -