இட்லி கடை படத்தின் புதிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷின் 52 வது படமாக இட்லி கடை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்து இருக்கிறார். ‘ராயன்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளனர். படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரகனி, ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது 2025 அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது படத்தில் இருந்து ‘என் பாட்டன்’ எனும் புதிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் வரிகளை தனுஷ் எழுதியிருக்கும் நிலையில் அந்தோணி தாசன் இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


