கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் டிஜே ஞானவேல். இவர் ஜெய் பீம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் வேட்டையன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படமானது வருகின்ற (அக்டோபர் 10) நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் டிஜே ஞானவேல் சூர்யா ஓகே சொல்லவில்லை என்றால் என்னால் வேட்டையன் படம் பண்ணியிருக்க முடியாது என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “சூர்யா சாருக்கு வேட்டையன் படத்தின் கதை தெரியும். மீண்டும் நான் சூர்யா சாருடன் படம் பண்ணலாம் என்று நினைத்தபோதுதான் எனக்கு ரஜினி சாரின் அழைப்பு வந்தது. அவருடன் படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. அப்போது சூர்யா சார், இது ரஜினி சாருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார். எனவே ‘நாம் எப்போது வேண்டுமானாலும் படம் பண்ணலாம் இது உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. போய் பண்ணுங்க’ என்று சொன்னார். அவர் என்னை அனுமதிக்கவில்லை என்றால் வேட்டையன் படம் பண்ணி இருக்க முடியாது. ஏனென்றால் நான் ஏற்கனவே சூர்யா சாருக்காக ஸ்கிரிப்டை தயார் செய்து விட்டேன். ப்ரீ ப்ரொடக்சன் பணிகளும் தொடங்கிவிட்டது” என்று தெரிவித்துள்ளார் டிஜே ஞானவேல்.