இந்திய அரசால் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் “தெய்வமகன்”. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இப்பெருமைக்குச் சொந்தக்காரர். அத்தகைய கலைஞனின் இரண்டாவது மகனாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார் இளைய திலகம் பிரபு. இவர் டிசம்பர் 25, 1956ல் பிறந்தவர். “சங்கிலி” எனும் படத்தில் தந்தை சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து தன் நடிப்புத் திறமையால் முன்னணி ஹீரோவாக நடித்து பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களைக் கொடுத்தார். ரஜினிக்கும் கமல்ஹாசனுக்கும் நெருங்கிய குடும்ப நண்பரான இவர் பல படங்களில் இருவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
பப்ளி நாயகனான இவரின் கன்னத்தில் விழும் குழிகளுக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் இருந்தனர். பிரபு-குஷ்பூ ஜோடியாக நடிக்கும் படங்கள் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்துள்ளன.அந்த வகையில் பி வாசு இயக்கத்தில் 1992-ல் ரிலீசான சின்னத்தம்பி படம் இன்றளவும் இந்திய அளவில் பேசப்படும் ஒரு சிறந்த படமாக உள்ளது. இப்படத்தில் முதிர்ச்சி இல்லாத, குழந்தைத்தனமான கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்திருந்தார் பிரபு. இப்படத்திற்காக மாநில அரசின் சிறந்த நடிகர் விருதையும் பெற்றார்.
நடிப்பு மட்டுமின்றி சிவாஜி புரொடக்ஷன்ஸ் எனும் பெயரில் பல படங்களையும் தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து 800 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த சந்திரமுகி படத்தை தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடித்தும் இருந்தார்.மேலும் இன்று வரையும் திரைப்படங்களில் ஆக்டிவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இத்தகைய பெருமைக்குரிய பிரபு இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்னும் நீண்ட காலம் வெற்றிகரமாக வாழ நாமும் வாழ்த்துவோம்.
- Advertisement -