பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். அதாவது ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.100 கோடிக்கும் அதிகமாக தட்டி தூக்கி இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இதன் பின்னர் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘டிராகன்’ திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்ஐகே’ – LOVE INSURANCE KOMPANY திரைப்படத்தையும், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டியூட்’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார் பிரதீப். இந்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாக இரண்டு படங்களில் ஏதேனும் ஒன்று மட்டும்தான் தீபாவளி ரேஸில் இணையும் என்று பேச்சு அடிபடுகிறது. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ‘எல்ஐகே’ படத்தை 2025 நவம்பர் மாதம் முதல் 2026 பிப்ரவரி மாதத்திற்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். எனவே இந்த படம் காதல் சம்பந்தமான கதைக்களம் என்பதால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு சார்பில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் பிரைம் வீடியோவுடன் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘எல்ஐகே’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, கிரித்தி ஷெட்டி, கௌரி கிஷன், சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.