கல்கி 2898AD – 2 தீபிகா படுகோனுக்கு பதிலாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி ஆகியோரின் நடிப்பில் ‘கல்கி 2898AD’ எனும் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் ஜானரில் வெளியான இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து படக்குழு ‘கல்கி 2898AD – 2’ படத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ‘கல்கி 2898AD’ முதல் பாகத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீபிகா படுகோன் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘கல்கி 2898AD – 2’ படத்திலிருந்து விலகி விட்டதாக இதன் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் தீபிகா படுகோன் கால்ஷீட் காரணமாக இதிலிருந்து விலகிவிட்டாரா? அல்லது கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டாரா? என்பது போன்ற உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. இருப்பினும் ‘கல்கி 2898AD – 2’ படத்தில் தீபிகா படுகோனின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
கல்கி 2898AD – 2 படத்தில் கல்கியை சுமக்கும் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நடிகை சாய் பல்லவி தற்போது ‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்து வரும் நிலையில், கல்கி 2898AD – 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -