ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் சிக்மா படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு சிக்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்க தமன் இதற்கு இசையமைக்கிறார். இந்த படமானது ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு பிறகு மார்ச் மாதத்திற்குள் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இந்த படமானது ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், சூதாட்டம், கொள்ளை போன்றவற்றை சுற்றி இந்த படத்தின் கதை நகர்வதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தது சந்தீப் கிஷன் இப்படத்தில் தனது மறைந்த தந்தையின் கடனை அடைக்க முயற்சிக்கும் ஒரு மகனாக நடித்திருக்கிறாராம். இந்த தகவல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. இனிவரும் நாட்களில் டீசர், டிரைலர், ரிலீஸ் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


