சங்கர் பட தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தான் தில் ராஜு. இவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களை தயாரித்து வருபவர். அந்த வகையில் இவர் ராம்சரண், அல்லு அர்ஜுன், நாகார்ஜுனா, பிரபாஸ் உள்ளிட்ட பல பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரித்திருக்கிறார். அதே சமயம் இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். சமீபத்தில் ராம்சரண், சங்கர் கூட்டணியில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் தயாரித்திருந்தார் தில் ராஜு. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அடுத்தது தில் ராஜு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தில் ராஜுவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது தில் ராஜுவின் வீடு, அலுவலகம் தவிர அவருக்கு சொந்தமான 8க்கும் மேலான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.