இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…
- Advertisement -
இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று ஜெய்பீம் மற்றும் வேட்டையன் பட புகழ் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முடங்கிய மக்களின் உரிமைகளையும், அவர்களுக்கு நிகழும் அநீதிகளையும் திரையில் வௌிச்சம் போட்டு காட்டும் முற்போக்கான இயக்குநர்களில் ஒருவர் ஞானவேல். இவர் ஜெய்பீம் படத்தை இயக்கி அதன் மூலம் இயக்குராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இவருக்கு உண்டு. இவரது இயக்கத்தில் வௌியான ஜெய்பீம் இருளர் இன மக்களின் முடங்கிப்போன வாழ்க்கை குறித்தும், அவர்களுக்கு நிகழும் இன்னல்கள் குறித்தும் பேசியது. மேலும், இத்திரைப்படம் பல மாற்றங்களையும் கொண்டு வந்தது.

ஜெய் பீம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கிறார். படத்தில் ராணா, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு இயக்குநர் ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர், வாக்குரிமை என்பது என் உரிமைகளை காத்து, உணர்வுகளை புரிந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் கடமை. அந்த வகையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.