ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் தியான் ஸ்ரீனிவாசனின் ஜெயிலர் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில், ரஜினி மற்றும் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியனாக ஓய்வு பெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மலையாளத்தில் ஜெயிலர் என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஷாக்கீர் மடத்தில் இயக்கியுள்ளார். தியான் ஸ்ரீனிவாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தியான் ஸ்ரீனிவாசன் ஜெயிலராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கோல்டன் வில்லேஜ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ரியாஸ் பையோலி இசையமைத்துள்ளார்.
இந்த இரண்டு படங்களும் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரே நாளில் மோத இருக்கிறது. ஏற்கனவே இந்த இரண்டு படங்களின் தலைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் ரசிகர்கள் குழப்பம் அடைவார்கள் என ரஜினியின் ஜெயிலர் படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்யும் போது தலைப்பை மாற்றி ரிலீஸ் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. எனினும் இது குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.