ஜனநாயகன் படத்தின் ஆடியோ லான்ச் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதன் இசையமைப்பாளராகவும் சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்தது இதன் முதல் பாடல் வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அல்லது தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில வருடங்களாக விஜய் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படாமல் இருந்தது.
ஆனால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜயின் கடைசி படம் என்பதால் இதன் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி 2025 டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


