ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வெளியானது. இதன் பிறகு விஜய் அரசியல்வாதியாக மாறி உள்ள நிலையில் தனது 69வது திரைப்படம் தான் தனது கடைசி படம் எனவும் அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி விஜயின் 69ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்க படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அரசியல் கலந்த மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய், போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் விஜயின் பிறந்தநாளில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அடுத்தது இந்த படத்தில் ஏகப்பட்ட கேமியோக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இப்படத்தின் கிளைமாக்ஸ் யாரும் பார்த்திராத ஒன்றாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் அல்லது தீபாவளி தினத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
எனவே இப்பாடலை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தில் விஜய் பாடியுள்ள பாடல் தான் முதல் பாடலாக வெளியாகும் என்றும் அந்தப் பாடலுக்கு ‘தளபதி கச்சேரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படத்தில் அசல் கோலார் பாடல் ஒன்றை பாடியிருக்கிறாராம். அந்த பாடல் தான் முதல் பாடலாக வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.