நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி போன்ற பல பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படமானது நடிகர் சூர்யா நடிக்க மறுத்த புறநானூறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள இந்த படத்தின் கதையில் மாற்றம் ஏதுமில்லை என்றாலும் படத்தின் தலைப்பு மாற்றப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் அதற்கான வேலைகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து இப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இவருடைய கதாபாத்திரம் குறித்த விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் ஏற்கனவே வெளியான இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.