கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்நிதி நடிப்பில் கடந்த மே 26 ஆம் தேதி கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வெளியானது. ராட்சசி படத்தை இயக்கிய கௌதம ராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன், சாயாதேவி, முனீஸ் காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கிராமத்தில் உள்ள இரு வேறு சமூகத்தினர் இடையே சாதி ஆதிக்கம் மற்றும் பதவி அரசியலால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிறப்பால் அனைவரும் சமம் என்பதையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வி அறிவு மிக முக்கியம் என்பதையும் எடுத்துரைக்கும் படமாக அமைந்துள்ளது.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.