ரஜினியுடன் இணைந்து நடிப்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு என பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதன் பிறகு இருவருக்கும் சினிமாவில் தனி அந்தஸ்து கிடைக்க இருவரும் தனித்தனி பாதையில் பயணித்தனர். ஆனாலும் இன்றுள்ள இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள்? அதன்படி சமீப காலமாக கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. இவர்களின் கூட்டணியிலான புதிய படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகவும் அந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ரஜினியுடன் தான் இணைந்து நடிப்பதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். அதாவது சமீபத்தில் துபாயில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல், “நீண்ட ஆண்டுகள் கழித்து ரஜினியும், நானும் இணைந்து படம் நடிக்கப் போகிறோம். அதை பார்த்துவிட்டு அது தரமான சம்பவமா? என சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார். எனவே இந்த புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.