நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தின் தனது 237 வது (KH237) திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், ரஜினியின் 173-வது படத்தை தயாரிக்க உள்ளார்.
மேலும் ரஜினியுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இவ்வாறு இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் திரைத்துறையில் பிஸியாக பணியாற்றி வரும் கமல்ஹாசன் சமீபத்தில் மருதநாயகம் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதாவது கடந்த 1997 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் கதை, தயாரிப்பு, இயக்கத்தில் தொடங்கப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படம் பணச்சிக்கல்கள் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த படமானது கமல்ஹாசனின் கனவு திரைப்படமாகும். இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் எடுக்க ஆசை இருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அதன்படி அவர், “எனக்கு மருதநாயகம் படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. இன்றைக்கு பல தொழில்நுட்பங்கள் முன்னேறி இருக்கும் காலத்தில் அதுவும் சாத்தியம் என்பதுதான் என் நம்பிக்கை” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.


