கமல்ஹாசன் மீது லிங்குசாமி புகார்… சூசகமாக பதிலடி கொடுத்த உலக நாயகன்…
- Advertisement -
தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசன் மீது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாருக்கு, கமல் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இத்திரைப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை கமல்ஹாசன், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ், சந்திர ஹாசன் ஆகியோர் தயாரித்து இருந்தனர். இப்படத்தில், கமலுடன் இணைந்து ஆண்ட்ரியா, விஷ்வநாத், நாசர், பூஜா குமார், ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. படம் தோல்வியைச் சந்தித்தது

உத்தம வில்லன் திரைப்படத்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், 30 கோடியில் மீண்டும் ஒரு படத்தை செய்து தருவதாக கமல்ஹாசன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் உறுதி அளித்திருந்தார். ஆனால், படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆன நிலையிலும், இதுவரை கமல்ஹாசன் படம் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திலும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்தது.

இந்நிலையில், லிங்குசாமியின் புகாருக்கு நடிகர் கமல்ஹாசன் சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார். டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், நமது குடும்பம் மிகவும் சிறியது என்றும், அதில் பல விவாதங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்தார். இருப்பினும், திரைத்துறையில் ஒருவரை ஒருவர் வைசபாடி, திட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.