மெய்யழகன் படத்தின் திரைவிமர்சனம்.
கார்த்தியின் 27 வது படமாக உருவாகியுள்ள மெய்யழகன் படமானது இன்று (செப்டம்பர் 27) ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தினை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ராஜு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்த படத்தில் அரவிந்த்சாமி அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 20 வருடங்கள் கழித்து குடும்பத்தினரின் கட்டாயத்தினால் சென்னையிலிருந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்கு செல்லும்போது சில கசப்பான அனுபவங்களை நினைத்து வருந்துகிறார். இருப்பினும் நெருங்கிய உறவினர் திருமண விழாவிற்கு செல்ல வேண்டும் என இரு மனதாக தஞ்சாவூருக்கு செல்கிறார். அந்த ஊரில் திருமண மண்டபத்தை அடைந்ததும் அத்தான் அத்தான் என்று ஒரு குரல் கேட்கிறது. அத்தான் அத்தான் என்று சொல்லும் அந்த நபர் எங்கு சென்றாலும் அரவிந்த்சாமியின் பின்னாலையே செல்கிறார். யார் இது? சின்ன வயதில் பழகி இருக்கிறோமா? இவனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? என்கிற பல கேள்விகளும் நினைவுகளும் அரவிந்த்சாமியை வாட்டி வதைக்கிறது. ஒரு கட்டத்தில் கார்த்தி காட்டும் அன்பும் பாசமும் நினைவுகளை திரும்பக் கொண்டு வருகிறதே என்று தவிக்கும் அரவிந்த்சாமிக்கு இவனுடைய பெயரைக் கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி தோன்றுகிறது.
இருப்பினும் ஊரை விட்டு செல்ல வேண்டும் என்று இரவோடு இரவாகக் கிளம்புகிறார் அரவிந்த்சாமி. அப்போதும் அத்தான் என்று அதே குரல் கேட்க அதன் பின் நடந்த மீத கதை என்ன என்பதுதான் மெய்யழகன்.
இந்த படத்தில் நடிகர் கார்த்தி தனது நடிப்பினால் அனைவரையும் கலங்க வைத்துள்ளார். அதேசமயம் அரவிந்த்சாமியும் தனது நடிப்பினால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். கார்த்தி, அரவிந்த்சாமி இருவருக்கும் இடையில் உள்ள பாசப்பிணைப்பை வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என இல்லாமல் கமர்சியல் படங்களையும் தாண்டி நல்ல ஒரு அழகான கதையில் உணர்வுபூர்வமான படமாக தந்துள்ளார் பிரேம்குமார். இந்த படத்தில் காட்டப்படும் பழைய கால வீடுகள், தெருக்கள் என அனைத்தும் நம்முடைய பழைய நினைவுகளை திரும்பக் கொண்டு வருகிறது. அதேபோல் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனங்களும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அடுத்தது இதுதான் நடக்கும் என கணிக்க முடியாத அளவில் ஒவ்வொரு காட்சிகளையும் வடிவமைத்துள்ளார் பிரேம்குமார். குறிப்பாக கார்த்தி – அரவிந்த்சாமி ஆகிய இருவரையும் போல் நம் குடும்பத்திலும் யாரேனும் இருக்க மாட்டார்களா என்ற உணர்வை தோன்ற வைக்கிறது இவர்களின் கதாபாத்திரங்கள்.
அந்தளவிற்கு அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர் கார்த்தியும் அரவிந்த்சாமியும். மேலும் கோவிந்த் வசந்தாவின் இசையும் மகேந்திரன் ராஜுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலு சேர்த்துள்ளன. இருப்பினும் படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் சில இடங்களில் ஏற்படும் தொய்வுகள் தெரியாமல் இருந்திருக்கும். மொத்தத்தில் மெய்யழகன் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல ஒரு பீல் குட் படத்தை பார்த்த திருப்தியை தரும்.