நடிகர் கவின், டியூட் மற்றும் பைசன் படம் குறித்து பேசி உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’, துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘டீசல்’ ஆகிய படங்கள் வெளியாகியது. அதில் ‘டியூட்’ மற்றும் ‘பைசன்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘டியூட்’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
‘பைசன்’ திரைப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதே சமயம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் நடிகர் கவின், ‘டியூட்’ மற்றும் ‘பைசன்’ படம் குறித்து பேசி உள்ளார்.
அதன்படி அவர், “டியூட் படம் எனக்கு பிடித்திருக்கிறது. லவ் டுடே படத்திலிருந்து இன்று வரையிலும் பிரதீப் ரங்கநாதனின் நகைச்சுவையும், சின்ன சின்ன மேனரிசமும் எனக்கு பிடித்துள்ளது. அவர் எது ஒர்க் அவுட் ஆகும் என்பதை தெரிந்து கொண்டு வேலை செய்கிறார். இந்த படத்தில் பிரதீப் மற்றும் மமிதா ஜோடியை நான் ரசித்தேன். ஆனால் இருவரும் இணையாததால் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன். அதேபோல் பைசன் படத்தில் உயிர கொடுத்திட்டாப்ல துருவ். அவர் வெறும் உடலுடன் ஓடும் ஒரு காட்சி படத்தில் இருக்கிறது. என்ன ஒரு கடினமான உழைப்பு. அது அவருடைய ரத்தத்தில் கலந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கும் ‘மாஸ்க்’ திரைப்படத்தில் கவின் நடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


