பிரபல இயக்குனர் ஒருவர் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுவாக திரைத்துறையில் ஹீரோவாக நடிப்பவர்கள் வில்லனாகவும், வில்லனாக நடிப்பவர்கள் ஹீரோவாகவும் நடித்து வருவதைப் போல், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களும் தற்போது இயக்குனராக மாறி வருகிறார்கள். அதேசமயம் பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்கள் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கவின் பட இயக்குனர் இளன் தற்போது ஹீரோவாக மாற இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதைத்தொடர்ந்து இளன், கவின் நடிப்பில் ஸ்டார் படத்தை இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி இவர் ஆகாஷ் முரளியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இயக்குனர் இளன் புதிய படம் ஒன்றை தானே இயக்கி நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. மேலும் இவரின் புதிய படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.