நடிகர் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மே 10ஆம் தேதி கவின் நடிப்பில் உருவாகியிருந்த ஸ்டார் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதைத் தொடர்ந்து நடிகர் கவின், இயக்குனர் நெல்சன் தயாரித்து வரும் ப்ளடி பெக்கர், இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்து வரும் மாஸ்க் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் கவின் , நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் பிரபு நடிக்கிறார். இந்த படத்திற்கு கிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.