கீர்த்தி சுரேஷ் – மிஸ்கின் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றார். தற்போது இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பாலிவுட்டிலும் கால் பதித்து ‘பேபி ஜான்’ எனும் படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் ‘கண்ணி வெடி’, ‘ரிவால்வர் ரீட்டா’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி, கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மிஸ்கினுடன் இணைந்து புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என்றும், இந்த படத்தில் மிஸ்கின் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இதில் பால சரவணன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்குகிறார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும், ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படமானது நீதிமன்றத்தில் நடக்கும் கதையாக உருவாக உள்ளதாம்.
இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.