நடிகை கீர்த்தி சுரேஷ், ரிவால்வர் ரீட்டா படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். அந்த வகையில் இவர், ‘ரிவால்வர் ரீட்டா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி (நாளை) திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “ரிவால்வர் ரீட்டா புதுச்சேரியில் நடக்கும் கதை. ஒரு குடும்பம் ஒரு தீவிரமான பிரச்சனையை எப்படி வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் கையாள்கிறது என்பதை பற்றியதுதான் இந்த படத்தின் கதை. முழு கதையும் ஒரே நாளில் நடக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், தி ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை சந்துரு இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சென்ட்ராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


