கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் பாலிவுட்டிலும் கால் பதித்து ‘பேபி ஜான்’ எனும் படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் ‘நடிகையர் திலகம்’, ‘சாணிக் காயிதம்’, ‘ரகு தாத்தா’ போன்ற படங்கள் வெளியானது. சமீபத்தில் ‘உப்பு கப்புரம்பு’ திரைப்படம் வெளியானது. இதன் பின்னர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி வரும் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ரிவால்வர் ரீட்டா எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை சந்துரு இயக்க பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், தி ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர்களிடம் மாட்டிக்கொண்ட தன்னுடைய குடும்பத்தை புத்திசாலியான கீர்த்தி சுரேஷ் எப்படி பாதுகாக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இப்படம் வருகின்ற ஆகஸ்டு 27ஆம் தேதி (நாளை) திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.