பிரித்விராஜ் இயக்கத்தின் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் எம்புரான். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வந்தது. அதன்படி டிக்கெட் முன்பதிவிலும் அசால்டாக ரூ. 50 கோடியை தட்டி தூக்கியது எம்புரான். அதைத் தொடர்ந்து வெளியான ஐந்து நாட்களுக்குள் ரூ. 200 கோடி கிளப்பில் இணைந்து மலையாள சினிமாவிலேயே புதிய சாதனை படைத்துள்ளது. இருப்பினும் இந்த படத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் இப்படத்திலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் நடிகர் மோகன்லாலும் தனது சமூக வலைதள பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் பாஜக நிர்வாகி ஒருவர், எம்புரான் திரைப்படத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகவும், இது வகுப்புவாத வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதுமட்டுமில்லாமல் கேரள உயர்நீதிமன்றத்தில் எம்புரான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி வழக்கும் தொடர்ந்திருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சுமார் ஒரு வாரமாக தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் எம்புரான் படத்தினால் ஏதேனும் வன்முறை தூண்டப்பட்டு இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பினார்.
அடுத்தது இந்த படம் எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தியதற்கான எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, பாஜக நிர்வாகியிடம், “நீங்கள் இந்த படத்தை பார்த்து விட்டீர்களா? உங்களின் ஆட்சேபனை என்ன? என்று கேள்வி எழுப்பியதோடு இந்த வழக்கு விளம்பரத்திற்காக தொடரப்பட்டுள்ளது என்று கண்டித்து இவ்வளக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -