கன்னட சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கிச்சா சுதீப், தான் இயக்குனராக மாறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சேரனின் தயாரிப்பிலும் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் ஆட்டோகிராஃப். இந்த படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வில் பள்ளிப்பருவ, கல்லூரிக்காதல், நட்பு, திருமணம் ஆகியவற்றை எப்படி கடந்து வருகிறார்கள் என்பதை மையமாக வைத்து எதார்த்தமான திரைக்கதையை கொடுத்திருந்தார் சேரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்தப் படத்தை கிச்சா சுதீப், ‘மை ஆட்டோகிராஃப்’ என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்திருந்தார். அதாவது கிச்சா சுதீப் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படம் தான் தன்னை இயக்குனராக மாற்றியது என்று கூறியுள்ளார்.
அதன்படி அவர், “ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு படப்பிடிப்புக்காக சென்னையில் ஒரு ஹோட்டலில் 30 நாள் தங்கியிருந்தேன். பக்கத்தில் ஒரு தியேட்டரில் ஆட்டோகிராஃப் படம் ஓடிக்கிட்டே இருக்கு. ரூமில் டிவி போட்டா அதில் ‘ஞாபகம் வருதே’ பாட்டு அடிக்கடி போட்டாங்க. சரி ஒரு நாள் அந்த படத்தை போய் பார்ப்போம் என்று பார்த்தால் படம் சூப்பராக இருந்தது. இந்த படத்தை கன்னடத்தில் எடுக்கலாம் என்று சேரன் சாரிடம் கேட்டு படத்தை ஒரு டைரக்டர் கிட்ட சொன்னேன். அந்த டைரக்டர் அந்த படத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சொன்னார். ஒரு இயக்குனர் எடுத்த படத்தை மாற்றுவது என்பது அவரை அசிங்கப்படுத்துவது போல என்று சொல்லிவிட்டு நானே அந்தப் படத்தை டைரக்ட் பண்ணேன். என்னை ஒரு இயக்குனர் ஆக்கியது அந்த படம் தான்” என்று தெரிவித்துள்ளார்.


