நடிகை க்ரித்தி ஷெட்டி, எல்ஐகே படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகை க்ரித்தி ஷெட்டி தமிழில் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அதில் எல்ஐகே – LOVE INSURANCE KOMPANY திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்க அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த படமானது சயின்ஸ் பிக்சன் ஜானரில் காதல் படமாக உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் நடிகை க்ரித்தி ஷெட்டி சமீபத்தில் நடந்த பேட்டியில் இந்த படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “எல்ஐகே படம் 2040-ல் நடப்பது போன்று எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் புதிதாக இருக்கும்.
இது ஒரு எதிர்கால அறிவியல் புனைக்கதை காதல் படம். பிரதீப் ரங்கநாதனின் ஜட்ஜ்மெண்ட்ஸ் எப்போதும் சரியாக இருக்கும். ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல் டீசருக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் நம்பினார். அது மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கணித்தார். அதுதான் நடந்தது. மேலும் எதிர்காலத்திற்கான எந்த குறிப்புகளும் எங்களிடம் இல்லை. எல்லாம் ஒரு கற்பனை தான். விக்னேஷ் சிவன் இந்த எதிர்கால அமைப்புகளுக்காக கடுமையாக உழைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.


