குடும்பஸ்தன் படக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஜெய் பீம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் மணிகண்டன். அதைத்தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த குட் நைட், லவ்வர் ஆகிய படங்களும் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த ஜனவரி மாதம் இவரது நடிப்பில் குடும்பஸ்தன் திரைப்படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதாவது ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறான் என்பதை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் காட்டியிருந்த படம் தான் குடும்பஸ்தன். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருந்தார். இதில் நடிகர் மணிகண்டன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். இந்த படம் இன்றுவரையிலும் ஒரு பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் தான் மணிகண்டன் – ராஜேஸ்வர் காளிசாமி ஆகிய இருவரும் சந்தித்து மீண்டும் ஒரு படம் பண்ண போவதாக முடிவெடுத்துள்ளனராம்.
ஆனால் இவர்களின் புதிய படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கப் போகிறது, வேறு யார் யாரெல்லாம் அந்த படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்பது தொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகையினால் அடுத்தடுத்த நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.