சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். இவ்வாறு பன்முகத் திறமைகளை கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தனது சிவகார்த்திகேயன் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். அடுத்ததாக இவருடைய தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்கியிருந்தார். ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற சிறுகதையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் காளி வெங்கட், சந்தோஷ் வேலு முருகன் உட்பட சில சிறுவர்களும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த மே மாதம் 3ஆம் தேதி திரையிடப்பட்டது. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்நிலையில் இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படமானது வருகின்ற ஜூன் 7-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.