லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடிக்க தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமானது மத நல்லிணக்கத்தை சொல்லும் விதமாக அமைந்திருந்தது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்ததாக இந்த படம் வெளியான ஒரு மாத காலத்திற்குள் ஓடிடிக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்தும் இந்த படம் ஓடிடி வரவில்லை. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு லால் சலாம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.