சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 14) கூலி திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருந்த இந்த படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இப்படம் வசூல் ரீதியாக புதிய சாதனையை படைத்திருக்கிறது. அதன்படி இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 375 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவிடும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படம் ஒரே நாளில் அதிக வசூலை வாரிக்குவித்து கோலிவுட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே விஜயின் லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ. 145 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் அந்த சாதனையை கூலி திரைப்படம் முறியடித்துள்ளது. இருப்பினும் படக்குழு சார்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் விரைவில் இப்படம் ரூ. 500 கோடியை தொட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -


