ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் மெண்டல் மனதில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் தற்போது ஏகப்பட்ட படங்களில் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கடைசியாக தனுஷின் ‘இட்லி கடை’ படத்திற்கு இசையமைத்திருந்தார். அடுத்தது சூர்யா 46, பராசக்தி ஆகிய படங்களிலும் பணியாற்றி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிப்பதிலும் ஆர்வம் உடைய இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ‘பிளாக்மெயில்’ திரைப்படம் வெளியானது. இது தவிர ‘இடி முழக்கம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தானே தயாரித்து, இசையும் அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#mentalmanadhil 4th schedule shoot on progress … in the legendary @selvaraghavan sir direction … wait for this particular album . After AO and ME this album will be my most favourite one ❤️✨ … pic.twitter.com/MvllVCsJBI
— G.V.Prakash Kumar (@gvprakash) October 9, 2025

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்பெற்ற செல்வராகவன் சார் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ படத்தின் 4ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக காத்திருங்கள். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு பிறகு இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்” என்று குறிப்பிட்டு படப்பிடிப்பு தள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.