பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர், ‘லவ் டுடே’ எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதாவது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அதிக லாபத்தை பெற்றுத் தந்தது. இதனை அடுத்து டிராகன், டியூட் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார் பிரதீப். இந்த இரண்டு படங்களும் இவருக்கு தொடர் வெற்றியைத் தந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தது.
 மேலும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எல்ஐகே’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன், மீண்டும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், புதிய படம் ஒன்றை தானே இயக்கி நடிக்க உள்ளாராம். அந்த படமானது சயின்ஸ் பிக்சன் ஜானரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் இதனை தயாரிக்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களை தயாரித்திருந்தது என்பதும் டியூட் படத்தை இந்நிறுவனம் தான் தமிழ்நாட்டில் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


